
பெங்களூர்: செப். 28-
பெங்களூர் நகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக தீவிர சோதனை நடத்திய போக்குவரத்து போலீசார், மொத்தம் 35,581 வாகனங்களை தணிக்கை செய்து 582 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 21 முதல் 27 வரை நகரில் உள்ள 53 போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சிறப்பு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் பிடிபட்ட 582 குடிபோதை வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் ஓட்டுநர் உரிமைகளும் (DL) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனங்களை இயக்கிய 183 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் விதிமீறல்களுக்காக ரூ.1.84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் போக்குவரத்து காவல் இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.













