Home மாவட்டங்கள் பெங்களூர் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ராணுவ வீரர் பலி

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ராணுவ வீரர் பலி

பெங்களூர்: செப். 22-
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை (ஐ.டி.பி.பி.) வீரர், நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகா சிவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னவீரேகவுடா (வயது 45). இவர் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் (ஐ.டி.பி.பி.) வீரராக பணியாற்றி வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்புதான் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சன்னவீரேகவுடா தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கனகபுரா பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். கடசள்ளி என்ற இடம் அருகே சென்றபோது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இந்த கொடூர விபத்தில் சன்னவீரேகவுடா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். உடனடியாக அவரை மீட்டு கனகபுரா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படாமல் அலட்சியம் காட்டியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை ஊழியர்களின் இந்த அலட்சியப்போக்கே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி, சன்னவீரேகவுடாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் கடும் ஆத்திரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கனகபுரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.