Home மாவட்டங்கள் சென்னை கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு தீவிர சிகிச்சை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: அக். 6-
சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு, பல்துறை மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், வி.எஸ்.பாபு தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார். ஒரு மாதமாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, தேவைக்கேற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 23-ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியானதால், மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. எனினும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எந்த அறிக்கையும் வெளியாகாததால், அவரது உடல்நிலை குறித்து மீண்டும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையில், வி.எஸ்.பாபு சுவாசிக்க உதவும் வகையில் கழுத்துப் பகுதியில் டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரது தரப்பினரிடம் கேட்டபோது, “அதுபோன்று எந்தக் கருவியும் பொருத்தப்படவில்லை. வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்தனர்.