Home செய்திகள் தேசிய செய்திகள் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்

டெல்லி: ஜூலை 21
”சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை” என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா திட்டவட்டமாக அறிவித்து விட்டது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, பேச்சுவார்த்தை நடத்தும் வரை, தற்போதைய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை. பாகிஸ்தான் இனிவரும் காலங்களில் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த இந்தியாவின் முடிவால் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் கூற்றையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.