
சென்னை, அக். 28-
தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’, ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025–26-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019-ன்படி, மிகை ஊதியம் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாகவும், மிகை ஊதியம் கணக்கிடுவதற்கான மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’, ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை அடிப்படையாகக் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம், 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடையோருக்கும் இதே விகிதத்தில் தொகை வழங்கப்பட உள்ளது. ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச மிகை ஊதியமும், 1.67 சதவீதம் கருணைத் தொகையும் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும். நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை பெறுவர். மொத்தம் 2,60,497 தொழிலாளர்களுக்கு ரூ.367.20 கோடி வழங்கப்படும்.














