Home செய்திகள் தேசிய செய்திகள் ஜென்ஸீக்கள் மாற்றும் பணியிட விதிகள்

ஜென்ஸீக்கள் மாற்றும் பணியிட விதிகள்

புதுடெல்லி, செப். 30-
நொய்டாவைச் சேர்ந்த நிறுவனர் நிதின் வர்மா, தனது நிறுவன ஆட்சேர்ப்பு அனுபவத்தை லிங்க்ட்இனில் பகிர்ந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. நேர்காணலுக்கு வந்த இளைஞர் ஒருவர், தினமும் மதியம் 30 நிமிடங்கள் தூங்க அனுமதிக்க வேண்டும் என்றும், அது தனது பணித்திறனை அதிகரிக்கும் என்றும் கேட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
வேலை துல்லியமாக முடிக்கப்பட்டால் பணி நேரத்தைப் பொருட்படுத்தமாட்டேன்; ஆனால் வேலை முடியாவிட்டால் எந்தத் தூக்கமும் காப்பாற்றாது என்று அந்த இளைஞரிடம் கூறியதாகவும் வர்மா பதிவிட்டிருந்தார்.
பணியிடத்தில் ஒருவர் செலவிடும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் வழக்கத்துக்கு மாறாக, ஜென்ஸீ தலைமுறையினர் தாங்கள் எவ்வாறு பணியாற்றுகிறோம் என்பதன் மூலம் உழைப்பை மதிப்பிட வேண்டும் எனக் கோருவதாக வர்மா கூறியிருந்தார்.
எனினும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நியாயமானவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். வழக்கமான ஆடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல், கையில் குளிர்பானம் அல்லது ஐஸ்ட் காபியுடன் நேர்காணலுக்கு வருவது உள்ளிட்ட போக்குகள் ஐடி, நிதி உள்ளிட்ட துறைகளில் காணப்படுவதாக வேலைவாய்ப்புச் சந்தை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு நிறுவனத் தலைவர் ஒருவர், நேர்காணலை ஜென்ஸீக்கள் அன்றாட வேலைகளுக்கு இடையிலான ஒரு நிகழ்வாகவே கருதுவதாக டிக்டாக் காணொளியில் விமர்சித்திருந்தார். நேர்காணலுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் அதைத் தள்ளிவைக்கக் கோரும் மின்னஞ்சல்கள் வருவதாக 36 வயது மனிதவள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபோன்ற வெளிப்படையான எதிர்பார்ப்புகள் பணியிடத்தின் இயல்பான பகுதியாகி வருவதாகவும் அவர் கூறினார். ஊதியம் குறித்த மின்னஞ்சலில் ரோஜாப்பூ இமோஜி அனுப்புவது, நேர்காணல் அல்லது பணியில் சேர்வதை உறுதி செய்துவிட்டு தகவல் தெரிவிக்காமல் விலகுவது போன்றவை நிறுவனங்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றன. இந்த ‘கோஸ்டிங்’ நடைமுறை தொழில்முறை பணிவின்மையாகக் கருதப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.