Home செய்திகள் தேசிய செய்திகள் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்

புதுடெல்லி, செப். 24-
வரும் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள 3 நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தையொட்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வரும் 26, 27 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்களாக இருப்பதால், அதைத் தொடர்ந்து 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.இதனால் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிக் கிளை சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும். இந்த பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (27-ம் தேதி) வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏ.டி.எம். இணைப்பு கிளைகள் மற்றும் பணக் காப்பகங்களும் (Currency Chests) அன்று திறந்திருக்கும்.வாடிக்கையாளர்களுக்கான வழக்கமான வங்கி சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேலைநிறுத்த காலத்தையொட்டி வங்கி சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.