Home மாவட்டங்கள் சென்னை டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டருக்குள் பார்

டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டருக்குள் பார்

சென்னை, நவ. 2-
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான அனுமதி விதிகளில் திருத்தம் செய்து மாநில அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெண்டர் முறையில் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான முந்தைய அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்த அனுமதி ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தவெக அரசு பார்களுக்கான அனுமதியை அக்டோபர் மாதம் வரை நீட்டித்தது. பின்னர் மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் வரை, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய விதிகளின்படி, பார் டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்ளாகவோ அமைந்திருக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் நகரத் திட்டமிடல் ஆணையங்களின் கீழ், வணிக நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கான தூரக் கட்டுப்பாடுகளில் இருந்து பார்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், பார்களை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாரிலும் அடிப்படை வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாரும் 20 மீட்டர் தரைத்தளப் பரப்பைக் கொண்டிருக்க வேண்டும். குடிநீர் மற்றும் கைகழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமாகப் பராமரிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் அமருவதற்கு போதுமான மேஜைகள் மற்றும் நாற்காலிகள் அமைக்கப்பட வேண்டும். பாருக்குள் மதுபானம் அருந்துவது வெளியில் தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். “மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு”, “பாதுகாப்பாக இருப்பீர்”, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்” என்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும் என அரசிதழில் கூறப்பட்டுள்ளது.