
நகோயா, செப். 22-
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியின் 2-வது நாளில், துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் சீனாவின் லிஹாவோ ஷெங் 254.2 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் வெள்ளியும், ருத்ராங்க் ஷ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். அதே பிரிவின் அணிகள் போட்டியில் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க் ஷ் பாட்டீல், பார்த்த் மானே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. சீனா தங்கமும், தென் கொரியா வெண்கலமும் வென்றன. செபக்டக்ரா ஆடவர் அணிகள் பிரிவில் ஜப்பானிடம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது. பாட்மிண்டன் ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. லக் ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, கிடாம்பி காந்த் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். ஆடவர் கபடியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஜப்பானை 49-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. மகளிர் கபடியில் இந்தியா வங்கதேசத்தை 42-21 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணிகள் அடுத்த ஆட்டங்களில் முறையே தென் கொரியா, ஈரானை சந்திக்கின்றன. மகளிர் மற்றும் ஆடவர் டேபிள் டென்னிஸ் அணிகள் பாகிஸ்தானை தலா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறின. மகளிர் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். வுஷுவில் நியெமான் வாங்சு 15-வது இடமும், 50 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் ஸ்ரீஹரி நடராஜ் 10-வது இடமும் பிடித்தனர். 4×200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்தியா 9-வது இடம் பிடித்து இறுதிக்கு முன்னேறவில்லை. மகளிர் கிரிக்கெட் இறுதியில் இந்தியா, இலங்கையை இன்று காலை 10.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
















