
புதுடெல்லி, செப். 30-
டெல்லி வடக்கு பகுதியில் உள்ள நியூ சனோத் காலனியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறப்படும் பெண் பார்வதி (42), அவரது கூட்டாளி விகாஸ் குமார் (30) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ரூ.4.75 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.56.69 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், பார்வதியின் வீட்டில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பார்வதி டெல்லியில் பல ஆண்டுகளாக போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர்.
அவர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஏற்கெனவே 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.













