Home செய்திகள் தேசிய செய்திகள் தமிழக கோயில்களுக்கு வழங்கிய யானைகளை திரும்பப் பெற வேண்டும்

தமிழக கோயில்களுக்கு வழங்கிய யானைகளை திரும்பப் பெற வேண்டும்

குவாஹாட்டி, செப். 30-
அசாமில் இருந்து அண்மையில் தமிழகக் கோயில்களுக்கு 5 யானைகள் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால் மற்றும் சிவா, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி ஆகிய யானைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகக் கோயில்களுக்கு அசாமில் இருந்து 5 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வனவிலங்கு ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாக அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட 5 யானைகளும் நன்கொடையாக வழங்கப்பட்டவையா அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டவையா என்பதை அசாம் அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவை விலைக்கு வாங்கப்பட்டிருந்தால், அதற்காக பணப் பரிமாற்றம் நடைபெற்றதா என்பதையும் அரசு விளக்க வேண்டும். பணப் பரிமாற்றம் நடைபெற்றிருந்தால், எவ்வளவு தொகை கைமாறியது என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்கப்பட்ட ஜெய்மாலா யானை விவகாரத்தில் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த விவகாரத்துக்குப் பிறகும் அசாமில் இருந்து மேலும் 5 யானைகள் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 5 யானைகளையும் திரும்பப் பெற வேண்டும். இந்த யானைகள் எந்த அடிப்படையில் தமிழகக் கோயில்களுக்கு வழங்கப்பட்டன, அவை நன்கொடையா அல்லது கொள்முதலா, பணப் பரிமாற்றம் இடம்பெற்றதா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளதாக கவுரவ் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.