
புதுடெல்லி, அக். 7-
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும், அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சத்தீவை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், “பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அவர்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வாதிட்டார்.மத்திய அரசு தரப்பில், “சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை மட்டுமே இலங்கை கடற்படை கைது செய்கிறது. இந்திய கடல் எல்லைக்குள் கைது சம்பவங்கள் நடைபெறுவதில்லை. இது இரு நாடுகளுக்கு இடையிலான வெளியுறவுக் கொள்கை தொடர்பான விவகாரம் என்பதால், நீதிமன்றம் நேரடியாகத் தலையிட முடியாது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. தரப்பிலும் கச்சத்தீவில் தமிழர்களுக்கு உள்ள உரிமை தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், கச்சத்தீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு தொடர்பானது என்பதை ஏற்க முடியும் என்றாலும், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என்று தெரிவித்தது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைத்தது.













