Home மாவட்டங்கள் சென்னை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்

சென்னை, அக். 11-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏஐஒய்எஃப்), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சிவானந்தா சாலையில் இருந்து நேற்று ஊர்வலமாகப் புறப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் க.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்ததால், போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அகற்றி, திருவல்லிக்கேணி சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் க.பாரதி கூறியதாவது: “மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து, எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில், அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.