Home மாவட்டங்கள் சென்னை மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் கேக்

மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் கேக்

சென்னை, அக். 11-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கேக் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துறை ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கேக்குகளை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக, உடனடியாக உண்ணக்கூடிய ஸ்பாஞ்ச் வகை கேக்குகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. மிக்ஸ்டு ஃப்ரூட், பிளாஸ்டிக் வெண்ணிலா, ரிச் சாக்லேட், பட்டர் மில்க் வெண்ணிலா உள்ளிட்ட வகை கேக்குகள் இதில் இடம்பெறுகின்றன.டெண்டர் நடைமுறையை இந்த மாத இறுதிக்குள் முடித்து, கொள்முதல் ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் கேக்குகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படும். நவம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கிடங்குகளில் இருந்து கேக்குகள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நவம்பர் 14-ம் தேதி காலை மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.