
சென்னை, நவ. 2-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தவெக ஆட்சியில் தொடர்ந்து பொருளாதார சரிவைச் சந்தித்து வருவது கவலை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சியில் அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தைப் பதிவு செய்துள்ளன. கேரளா 23 சதவீதமும், ஆந்திரப் பிரதேசம் 24 சதவீதமும், கர்நாடகம் 18 சதவீதமும், தெலங்கானா 14 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், தமிழ்நாடு வெறும் 3 சதவீத வளர்ச்சியுடன் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாயால், மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் ஓரளவு உயர்வு காணப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதாரத் தேக்கநிலையின் அளவீடாக இதைக் கருத வேண்டும் என்பதை தவெக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மட்டும் நம்பியிருக்காமல், தமிழ்நாட்டின் சொந்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மேலும், அந்த உற்பத்திப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்வதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும், மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உயர்த்த முடியும். இதற்கான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.















