
புதுடெல்லி: நவ. 12–-
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி அமைத்தது ராஜீவ் காந்திக்கு செய்த துரோகமாகிவிடாதா என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.‘Belonging: A Journey of Love’ என்ற தனது சுயசரிதையில் சோனியா காந்தி இதுகுறித்து எழுதியுள்ளார். 2004-ம் ஆண்டு பாஜகவை எதிர்கொள்வதற்காக அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைய வேண்டியிருந்தது. தென்னிந்தியாவில் திமுக முக்கியமான கட்சியாக இருந்ததால், அந்தக் கட்சியுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தனர். ஆனால், 1991-ம் ஆண்டு தேர்தலின்போது ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு திமுக தொண்டர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தனர் என்றும், அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் ராஜீவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருந்தனர் என்றும் சோனியா கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தமிழ் கொலையாளிகளுக்கு திமுக தலைவர் மறைமுகமாக ஆதரவளித்ததாகக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, 1997-ல் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இதனால், திமுகவுடன் கைகோப்பது ராஜீவுக்கு துரோகமாகிவிடாதா என்ற கேள்வி தன்னை வாட்டியதாக சோனியா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த அவசரமாக முடிவெடுக்க வேண்டியிருந்ததாகவும், கருணாநிதியை முதன்முறையாக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கைகள் நடுங்கியதாகவும் அவர் எழுதியுள்ளார்.
மொழி வேறுபாடு இருந்தபோதும் கருணாநிதி அன்பாகப் பதிலளித்ததாகவும், பின்னர் அவர்மீது மரியாதை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2004 மே 4-ம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் திமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை; ஈழத் தமிழர்களையே ஆதரித்ததாகத் தெரிவித்தார்.













