Home செய்திகள் தேசிய செய்திகள் திமுக மூன்றாவது அணி அமைக்கத் திட்டமா?

திமுக மூன்றாவது அணி அமைக்கத் திட்டமா?

டெல்லி, அக். 1-
தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் நெருக்கம் காட்டி வரும் நிலையில், தேசிய அளவில் மட்டும் திமுகவின் ஆதரவை காங்கிரஸ் கோரி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதால், நீண்டகால திமுக–காங்கிரஸ் உறவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய அளவில் திமுகவின் ஆதரவை மட்டும் கோரும் காங்கிரஸின் அணுகுமுறையை திமுக நிர்வாகிகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற அரசியல் சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பெண் தலைவர் ஒருவர் திமுகவின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ‘இந்தியா’ கூட்டணியில் திமுக நீடிக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மாநில அளவில் கூட்டணி வேறுபாடுகள் இருந்தாலும், தேசிய நலன் கருதி திமுக ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு திமுக தரப்பில் உடனடி சாதகமான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.