
திருச்செந்தூர், செப். 6: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவில், சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளித் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில், தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. பின்னர், சிவன் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாலை நேரத்தில், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன், சுவாமி ஜெயந்திநாதரும் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் இரவு நேரத்தில், மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளித் தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
















