Home செய்திகள் தேசிய செய்திகள் திருமலையில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலையில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: அக். 2-
புரட்டாசி மாதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க சுமார் 30 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை காரணமாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருமலைக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் தொடங்கி, தேவஸ்தான சத்திரங்கள், கோயில்கள், மலைப்பாதைகள், அன்னதானக் கூடம், தலை முடி காணிக்கை செலுத்தும் இடம், லட்டு பிரசாதம் விநியோக மையம், தங்கும் அறைகள் வழங்கும் இடம் மற்றும் தரிசனத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்வதைக் காண முடிகிறது.
திரண்டு வரும் சாமானிய பக்தர்களின் வசதிக்காக, திருப்பதி தேவஸ்தானம் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்ட இதர சிறப்பு தரிசன முறைகளை ரத்து செய்துள்ளது. எனினும், பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து திருமலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.இதனால், சர்வ தரிசனத்துக்கு நேற்று 30 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.