Home மாவட்டங்கள் பெங்களூர் போலி மருந்து கும்பல் அட்டகாசம்:`பைசர்’ நிறுவனத்திற்கு48 மணி நேர கெடு

போலி மருந்து கும்பல் அட்டகாசம்:`பைசர்’ நிறுவனத்திற்கு48 மணி நேர கெடு

பெங்களூர்: அக். 2-
கர்நாடக மாநிலத்தில் அம்பலமாகியுள்ள போலி மருந்து விநியோக கும்பல் விவகாரத்தில், ‘பைசர்’ மருந்து நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு துறை ஆணையர் சீனிவாஸ் 48 மணி நேர கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிடதி அருகே போலி மருந்துகள் பிடிபட்ட நிலையில், பைசர் நிறுவனத்தின் பெயரிலேயே போலியாக மருந்துகளை தயாரித்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையும் கண்டறியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால், இந்த வழக்கில் இந்தியாவில் உள்ள பைசர் நிறுவனம் உரிய ஆவணங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஆவணங்களைக் கேட்டும் நிறுவனம் தராததால், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பைசர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எப்.டி.ஏ. ஆணையர் சீனிவாஸ் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
அசல் மருந்துகளுடன் போலி மருந்துகள் கலந்துள்ளதால், அவற்றை பிரித்தறிவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனையடுத்தே தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு 3 முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:

  • 48 மணி நேரத்தில் அறிக்கை: இந்தியாவில் பைசர் மருந்துகளின் விற்பனை, விநியோகம் மற்றும் போலி மருந்துகள் எங்கெல்லாம் திரும்பப் பெறப்பட்டன என்ற முழு விவரத்தையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
  • போலி ஸ்டாக்கை கண்டறிய உதவி: ஆஸ்பத்திரிகள் மற்றும் கடைகளில் உள்ள அசல் மற்றும் போலி மருந்து இருப்பை கண்டறிய இந்திய அதிகாரிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
  • ஊழியர்கள் மீது நடவடிக்கை: போலி மருந்துகள் கிளினிக் வரை செல்ல துணைபோன ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    விசாரணைக்கு தாமதமின்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க தலைமையகத்திற்கு எப்.டி.ஏ. ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.