
சென்னை: அக். 7-
தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த ஓரிரு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சன்ன ரக அரிசி உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சன்ன ரக நெல் அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. அவை தமிழக அரிசி ஆலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அரிசியாக்கி விற்பனை செய்யப்படுகின்றன.
உள்ளூர் தேவையைத் தாண்டி, பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அரிசி அனுப்பப்படுகிறது. தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. தமிழக அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து நெல் கொள்முதலை அதிகரித்து, ஆலைகளில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நெல் மூட்டைகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், போலீசார் துணையுடன் திருப்பி அனுப்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கணிசமாக உயரும் என நெல் வியாபாரிகள், கமிஷன் ஏஜென்டுகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். ரூ.1,400-க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி தற்போது ரூ.1,800-க்கும், ரூ.1,600-க்கு விற்ற பொன்னி ரூ.1,950-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளை பொன்னி ரூ.1,900-ல் இருந்து ரூ.2,300 ஆகவும், இட்லி அரிசி ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆகவும் உயர்ந்துள்ளது. பச்சரிசி ரூ.1,500-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், 25 கிலோ சிவாஜி பொன்னி ரூ.1,800-ல் இருந்து ரூ.2,400 ஆகவும், 30 கிலோ பாஸ்மதி ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆகவும் உயர்ந்துள்ளது.













