Home தலைப்பு செய்தி பஸ் கட்டணம் கிடு கிடு உயர்வு

பஸ் கட்டணம் கிடு கிடு உயர்வு

பெங்களூரு, நவ. 4-
கர்நாடக மாநிலத்தில் பஸ் கட்டணம் கிடு கிடு என உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாலும்
டீசல் விலை உயர்வு மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி, மாநிலத்தின் 4 அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்து கட்டணம் 23 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரவுள்ளதால், பொது போக்குவரத்தை நம்பி பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கட்டண உயர்வு முடிவை அறிவித்தார். கே.எஸ்.ஆர்.டி.சி. சாதாரண பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.9 வரையிலும், விரைவு பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.18 வரையிலும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டி.சி. பேருந்துகளிலும் கட்டணம் உயர்வு:
பி.எம்.டி.சி.பேருந்துகளிலும் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.4-ம், 2 முதல் 4 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.6-ம் உயர்த்தப்படும். பி.எம்.டி.சி. பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.12 வரை கட்டணம் உயரும்.
வாயுவஜ்ரா ஏசி பேருந்துகளில் 6 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.5-ம், 6 முதல் 18 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.10-ம், நீண்ட தூர பயணத்திற்கு ரூ.15-ம் உயர்த்தப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி.-யில் சுமார் 150 நிலைகளின் அடிப்படையில் கட்டணம் சீரமைக்கப்பட்டுள்ளது.
டீசல், சம்பள செலவு உயர்வு:
போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை குறித்து விளக்கிய அமைச்சர், மாநிலத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களிலும் மொத்தம் 26,125 பேருந்துகள் உள்ளன என்றும், 1,03,646 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றும் கூறினார். தினமும் 24,179 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு, சுமார் 1.24 கோடி பயணிகள் இந்த போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.
கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பள உயர்வு, டயர் விலை மற்றும் பேருந்துகளின் பராமரிப்பு செலவு ஆகியவை அதிகரித்துள்ளதால் கட்டணத்தை சீரமைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று அவர் நியாயப்படுத்தினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.98-ஐ எட்டியுள்ளதுடன், ரூ.10.47 வரை உயர்ந்துள்ளது. தற்போது போக்குவரத்து கழகங்களின் மொத்த செலவில் 80 சதவீதம் டீசல் கொள்முதல் மற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது. ஆண்டிற்கு டீசல் கொள்முதலுக்கு மட்டும் ரூ.5,694 கோடி செலவாகிறது என்றும், விலை உயர்வினால் மட்டுமே கழகங்களுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.500 கோடி கூடுதல் சுமை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
டீசல் விநியோகத்திற்காக ரூ.1,111.88 கோடி நிலுவை தொகை செலுத்த வேண்டியுள்ளது. 2024-ல் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டதால், அதன் மூலமும் கழகங்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது என்றார்.
ரூ.16 ஆயிரம் கோடி செலவு, ரூ.14 ஆயிரம் கோடி வருமானம்:
நான்கு போக்குவரத்து கழகங்களும் ஆண்டிற்கு மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி செலவு செய்யும் நிலையில், வருவாய் ஈட்டுவது சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படுகிறது என்று அமைச்சர் விளக்கினார்.
கழகங்களின் கடன் சுமை, நிலுவை தொகைகள் மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்டணம் சீரமைக்கப்பட்டுள்ளது. 2021-ல் சீனிவாச மூர்த்தி கமிட்டி அவ்வப்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. கடந்த ஆண்டு அதுல் குமார் திவாரி தலைமையிலான கமிட்டியும் முழுமையான ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே தற்போது கட்டண உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
2025 ஜனவரியில் கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்டது. டீசல் விலை, சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பழைய கட்டணத்தில் சேவையை தொடர்வது கடினமாக உள்ளது என்று அவர் கூறினார்.
பெங்களூரு பயணிகளுக்கு கட்டண உயர்வு அதிர்ச்சி:
புதிய கட்டணத்தின்படி முக்கிய வழித்தடங்களில் பயணக் கட்டணம் விவரம் வருமாறு:
பெங்களூரு–நெலமங்களா: ரூ.35-ல் இருந்து ரூ.44 ஆக உயர்வு.
பெங்களூரு–கோலார்: ரூ.81-ல் இருந்து ரூ.100 ஆக உயர்வு.
பெங்களூரு–சிக்மகளூரு: ரூ.295-ல் இருந்து ரூ.363 ஆக உயர்வு.
மெஜஸ்டிக்–சிவாஜிநகர்: ரூ.12-ல் இருந்து ரூ.18 ஆக உயர்வு.
மெஜஸ்டிக்–யஷ்வந்த்பூர்: ரூ.18-ல் இருந்து ரூ.25 ஆக உயர்வு.
சக்தி திட்டத்திற்கு அரசின் நிதி:
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கும் ‘சக்தி திட்டத்தினால்’ தான் போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர், கழகங்கள் இலவசமாக சேவை வழங்கவில்லை; இத்திட்டத்தின் கீழ் பெண்கள் பயணம் செய்வதற்கான பணத்தை அரசே கழகங்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.
சக்தி திட்டத்தின் கீழ் கழகங்களுக்கு வர வேண்டிய நிதி உட்பட அரசிடமிருந்து நிலுவையில் உள்ள தொகைகள் படிப் படியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள் நிதி ரீதியாக பலம்பெற கட்டண உயர்வு அவசியமானது என்று அமைச்சர் பைரதி சுரேஷ் நியாயப்படுத்தினார்.
மொத்தத்தில், இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டண உயர்வு, மாநிலத்தின் பொது போக்குவரத்து பயணிகளின் பாக்கெட்டுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது போக்குவரத்து துறை செயலாளர் தீபா சோளன், கே.எஸ்.ஆர்.டி.சி. மேலாண்மை இயக்குனர் சிவகுமார் மற்றும் பி.எம்.டி.சி. மேலாண்மை இயக்குனர் ரகுநந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.