
டெல் அவிவ், அக். 29-
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்தபட்சம் 61 இடங்களைப் பெற வேண்டும். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி கூட்டணி, 85.6 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 53 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இரு தரப்புக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவு, காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் 77.7 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா போர், ஈரானுடனான மோதல்கள் உள்ளிட்ட விவகாரங்களால் நெதன்யாகு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில், அரபு கட்சிகள் மொத்தம் 19 இடங்கள் வரை முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனினும், அரபு கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற நெதன்யாகு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியும் இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற தேசிய அளவில் குறைந்தபட்சம் 3.25 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். ரிசர்விஸ்ட் கட்சி 2.7 சதவீதம், பீப்பிள் ஆஃப் இஸ்ரேல் கட்சி 1.6 சதவீதம், ஹரேடி பப்ளிக் கட்சி 0.2 சதவீதம் பெற்றுள்ளதால், அவை அந்த வரம்பை எட்டவில்லை. இறுதி நிலவரம் அக்டோபர் 30-ம் தேதியும், தேர்தல் முடிவுகள் நவம்பர் 4-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிபர் ஐசக் ஹெர்சோக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து, கூட்டணி அரசு அமைக்க ஒருவருக்கு அதிகபட்சம் 42 நாட்கள் அவகாசம் வழங்குவார். முயற்சி தோல்வியடைந்தால், மீண்டும் தேர்தல் நடைபெறலாம்.














