Home செய்திகள் உலக செய்திகள் நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு: உடல்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு

நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு: உடல்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு

காத்மாண்டு, ஆகஸ்ட் 29- நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கவும், அவர்களை உறவினர்கள் அடையாளம் காணவும் நேபாள காவல்துறை ‘க்யூஆர்’ குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. சித்வான் பகுதியில் மட்டும் 137 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவமனைகளில் 30 முதல் 50 உடல்களை மட்டுமே வைக்கும் வசதி உள்ளதால், பயன்படாத அரசு கட்டிடம் ஒன்று குளிரூட்டப்பட்டு 250 உடல்களைச் சேமிக்கும் தற்காலிகப் பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது. தனஹுன், கோர்கா, தாடிங், நவல்பராசி போன்ற பிற மாவட்டங்களில் மீட்கப்பட்ட 93 சடலங்கள் பொக்காரா நகர பிணவறைகளுக்கு மாற்றப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவமனையின் மொத்த கொள்ளளவான 88 வசதியையும் தாண்டி உடல்கள் குவிந்துள்ளன. தாடிங் மாவட்டத்தில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் உட்பட 37 உடல்களில் சில காத்மாண்டுக்கும், கோர்காவில் மீட்கப்பட்ட உடல்கள் பொக்காராவுக்கும், நவல்பராசியின் உடல்கள் பால்பா பகுதிக்கும் மாற்றப்பட்டுத் தற்காலிக இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களின் புகைப்படங்கள், கைரேகைகள், உடலமைப்பு விவரங்கள் மற்றும் பிற தகவல்களைச் சேகரித்து ஒரு பட்டியலாகத் தயாரித்துள்ளனர். இந்த விவரங்களை அணுகும் வகையில் ஒரு ‘க்யூஆர்’ குறியீட்டை உருவாக்கி, தங்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் குடும்பத்தினரின் விவரங்களுடன் ஒப்பிட்டு உடல்களை அடையாளம் காண முடிவதோடு, தேவையின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. சபிக்கப்பட்ட 26-ம் தேதி பெரும்பாலான இயற்கை பேரிடர்கள், தீவிரவாத தாக்குதல்கள் 26-ம் தேதி நடைபெற்று உள்ளன. குறிப்பாக 2001 ஜனவரி 26-ம் தேதி குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. 2003 டிசம்பர் 26-ம் தேதி ஈரானில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 2004 டிசம்பர் 26-ம் தேதி இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. 2005 ஜூலை 26-ம் தேதி மும்பையில் கனமழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டது. 2008 ஜூலை 26-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த 26-ம் தேதி நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், 26-ம் தேதி சபிக்கப்பட்ட நாளாக மாறியிருக்கிறது.