
லண்டன்: ஆகஸ்ட் 29-
பாகிஸ்தான் அணி, 2026-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நோ-பால்களை வீசிய மோசமான சாதனையை படைத்துள்ளது. இவ்வாண்டு இதுவரை நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் அணி 61 நோ-பால்களை வீசியுள்ளது. இதனால், அந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 38 நோ-பால்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசாத், இந்த ஆண்டில் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகளில் 34 நோ-பால்களை வீசியுள்ளார். இதுவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்டு முழுவதும் வீசிய நோ-பால்களை விட வெறும் 4 மட்டுமே குறைவு.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 66.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.














