
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியது.
மலைப்பிரதேசமான நேபாள நாட்டின் வடக்கே திபெத் எல்லை உள்ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்டத்தில் போடே கோசி என்ற நதி ஓடுகிறது. இந்த நதியில் நேற்று முன்தினம் காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பல அடி உயரத்துக்குக் கீழ் நோக்கி பாய்ந்த இந்த பெருவெள்ளம் ரசுவா, தாதிங் மற்றும் நுவாகோட் ஆகிய 3 மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. வானுயர்ந்த கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் என அனைத்தையும் வெள்ளம் சுருட்டிச் சென்றது.
இடிபாடுகளுடன், சேறும் சகதியுமாய் பாய்ந்தோடிய வெள்ளத்தில் ஏராளமான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800 வெளிநாட்டினர் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளள்ளதாக நேபாள அரசு நேற்று தெரிவித்தது இதுகுறித்து நேபாள காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், “வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 359 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.வெளிநாட்டினர் உட்பட 1,500 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தருணத்தில், எங்கள் முன்னுரிமை என்பது உயிர்களைக் காப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பது, மீட்புமற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறியதாவது: இந்த பேரிடரால் ஏற்பட்ட முழு சேதத்தை அளவிட அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 300 பேர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்திரிகர்கள். அவர்களைத் தொடர்பு கொள்ள அரசு முயன்று வருகிறது.நேபாள குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் நாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ அதே அளவு வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்திய அரசு ஏற்கெனவே நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.












