
பெங்களூரு: செப். 21:
சித்ரதுர்கா ரேணுகாஸ்வாமி கொலை வழக்கின் முதல் குற்றவாளியான பவித்ரா கௌடா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 5 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ள புதிய சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, பரப்பன அக்ரஹார சிறையில் பாலியல் வழக்கு குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா இருந்த சிறை அறை பகுதியில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி பவித்ரா கௌடா பல பெண் தண்டனை கைதிகள் அடங்கிய பொதுவான சிறை அறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அந்த அறையில் பல கைதிகளுடன் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாலும், தொடர் சோதனைகள் காரணமாக மற்ற கைதிகள் மனரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாலும் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட வேறு அறைக்கு மாற்றக்கோரி பவித்ரா கௌடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தகுந்த வசதிகள் கொண்ட அறைக்கு அவரை மாற்றுமாறு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, சிறை விதிமுறைகளின்படி தற்போது 5 தண்டனை கைதிகள் மட்டுமே உள்ள புதிய சிறை அறைக்கு பவித்ரா கௌடா மாற்றப்பட்டுள்ளார்.













