
புதுடெல்லி, செப். 30-
தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் நெருங்கும் நிலையில், நாட்டில் பருப்பு வகைகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு உள்ளிட்டவற்றின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சில பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை அதிகரித்துள்ளது. இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் கூட்டமைப்பு (IPGA) தகவல்படி, மொத்த விற்பனையில் பருப்பு வகைகளின் விலை சராசரியாக 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் கொண்டைக்கடலை 11 சதவீதமும், பாசிப் பருப்பு 10.6 சதவீதமும், துவரம் பருப்பு 6.2 சதவீதமும், பட்டாணிப் பருப்பு 6 சதவீதமும் உயர்ந்துள்ளன.
ஆண்டு ஒப்பீட்டில் கொண்டைக்கடலை 27 சதவீதமும், பட்டாணிப் பருப்பு 47 சதவீதமும், உளுந்தம் பருப்பு 27 சதவீதமும் அதிகரித்துள்ளன. மத்திய அரசின் தகவல்படி, கடலைப் பருப்பு கிலோ ரூ.88.72, துவரம் பருப்பு ரூ.125.72, பாசிப் பருப்பு ரூ.112.14 என சராசரியாக விற்பனையாகின்றன. எல் நினோ தாக்கம், குறைவான பருவமழை, காலம் தவறிய மழை, காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி காரணமாக மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பருப்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
துவரம் மற்றும் பாசிப் பருப்பு சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது.கொண்டைக்கடலை இறக்குமதியில் 95 சதவீதம் ஆஸ்திரேலியாவைச் சார்ந்துள்ள நிலையில், அந்நாட்டின் கடந்த ஆண்டு விளைச்சல் 50 சதவீதம் குறைந்தது. 2025-26 நிதியாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை இந்தியா 6.42 லட்சம் டன் கொண்டைக்கடலை மட்டுமே இறக்குமதி செய்தது. இது முந்தைய ஆண்டைவிட 45 சதவீதம் குறைவு. தற்போது அரசிடம் 4.5 மில்லியன் டன் பருப்பு கையிருப்பு உள்ளது. தீபாவளி வரை சில்லறை விலையில் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை மேலும் உயர வாய்ப்புள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.













