Home செய்திகள் உலக செய்திகள் பாகிஸ்தானில் குவியும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள்

பாகிஸ்தானில் குவியும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள்

இஸ்லாமாபாத்: நவ. 12–-
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ராணுவ சரக்கு விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் பாகிஸ்தானின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. நேரடி தாக்குதல்கள் சில காலம் நடைபெறாதபோதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தது. அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற்றதால் தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மீண்டும் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது என்றும் கூறப்படுகிறது.
ஐஎல்-76எம்டி, ஏஎன்-124 மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐஎல்-76 ரக சரக்கு விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை ராணுவப் பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், எத்தகைய சரக்குகளை ஏற்றி வந்தன, பாகிஸ்தானுக்குச் சென்றதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.
ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு வந்ததாகவும், வங்கதேசத்தின் சிட்டகாங்கிலிருந்து ஏஎன்-124 ரக விமானம் கராச்சியில் தரையிறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல நாடுகளின் விமானங்கள் வந்திருப்பது, ராணுவத் தளவாடப் போக்குவரத்து அதிகரித்துள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.