
சென்னை, செப். 19- பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக பாஜகவிலிருந்து தமிழகத்துக்கு வந்து, 2024 முதல் திருச்சியில் வசித்து வரும் தமிழக பாஜக பெண் நிர்வாகி ஒருவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடக பாஜகவில் பணியாற்றி வந்த தன்னை, கருப்பு முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாகவும், தனது குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்களில் பாதுகாவலராகத் தனது பெயரைச் சேர்த்து,
தன்னை ‘டாடி’ என்று குழந்தைகளை அழைக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கம் தொகுதியில் சீட் வாங்கித் தருவதாகவும் அவர் உறுதியளித்ததாகவும், அவரது பேச்சை நம்பி பெங்களூருவில் இருந்து குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திருச்சியில் தன்னை கருப்பு முருகானந்தம் உடலளவிலும் மனதளவிலும் மிகக் கடுமையாகத் துன்புறுத்தியதாகவும், அவருடனான உறவில் கருவுற்ற நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனது சொந்த வீட்டை மோசடியாகக் கைப்பற்ற முயன்றதுடன், இதுகுறித்து கேட்டபோது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மின்னணு ஆதாரங்கள், ஆடியோக்கள் மற்றும் சாட்சிகளை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாநிலப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு கருப்பு முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.













