
டெல்லி, செப். 24-
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த 1,498 பரிசுப் பொருட்கள், பிரதமர் நினைவுப் பொருட்கள் மின்னணு ஏலத்தின் 8-வது பதிப்பின் ஒரு பகுதியாக, அக்டோபர் 2-ம் தேதி வரை பொது ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் குறித்த கண்காட்சி டெல்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக்கூடத்தில் (என்ஜிஎம்ஏ) நடைபெற்று வருகிறது. ஏலத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களில், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் எண்ணெய் ஓவியத்தின் ஆரம்ப விலை ரூ.1,44,000 ஆகும். மயில் கைப்பிடியுடன் கூடிய பயன்பாட்டுப் பெட்டிகளின் ஆரம்ப விலை ரூ.15,000. பழமையான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட பித்தளை ‘ராயல் எலிபன்ட் பிராசஷன்’ (ஹவுடா) சிற்பத்தின் ஆரம்ப விலை ரூ.2,25,000. மூங்கில் மற்றும் பிரம்பால் செய்யப்பட்ட சுவர் கடிகாரத்தின் ஆரம்ப விலை ரூ.3,600. அருணாசலப் பிரதேசத்தின் வான்சோ மரக்கலை வடிவில் உருவாக்கப்பட்ட பழங்குடியினத் தம்பதி சிற்பத்தின் ஆரம்ப விலை ரூ.7,500. கல் மற்றும் இறகு அலங்காரப் பதக்கத்துடன் கூடிய ராஜஸ்தானி தலைப்பாகையின் ஆரம்ப விலை ரூ.3,000. கர்நாடகத்தைச் சேர்ந்த வெள்ளியால் செய்யப்பட்ட ராமர் நினைவுப் பொருளின் ஆரம்ப விலை ரூ.13,50,000. கையால் நெய்யப்பட்ட பழங்குடியின வடிவமைப்பைக் கொண்ட அலங்கார கைப்பையின் ஆரம்ப விலை ரூ.15,000. பாராலிம்பிக் வீராங்கனை அவனி லெகராவின் தனிப்பயனாக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு ஜாக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.2,25,000. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் pmmementos.gov.in என்ற இணையதளத்தில் சென்று, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் கணக்கை உருவாக்கி, ஆதார் அங்கீகாரத்தை வழங்க வேண்டும். பின்னர் பட்டியலைப் பார்த்து, விரும்பிய பொருட்களைத் தேர்வு செய்து ஏலத் தொகையை பதிவு செய்யலாம். ஏலம் முடிந்ததும் தேர்வு செய்யப்பட்ட அதிகபட்ச ஏலதாரர் பணம் செலுத்திய பிறகு, பொருட்கள் அவரது முகவரிக்கு அனுப்பப்படும். கண்காட்சியை நேரில் பார்வையிட விரும்புவோர், இந்தியா கேட் அருகே உள்ள ஜெய்ப்பூர் ஹவுஸில் அமைந்துள்ள என்ஜிஎம்ஏ-வுக்குச் செல்லலாம். செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும் கண்காட்சி, செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் ரூ.20. அருகிலுள்ள மெட்ரோ நிலையம் சென்ட்ரல் செக்ரட்டேரியட் ஆகும்.











