
பெங்களூரு: அக். 7-
“பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையே நமக்கு என்றும் சிறந்த முன்மாதிரி” என்று பாஜக மத்திய நாடாளுமன்ற குழு உறுப்பினரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா புகழாரம் சூட்டினார்.
கர்நாடக மாநில பாஜக சார்பில் ‘சேவா சங்கல்ப்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக நாடு தழுவிய அளவில் ‘சேவா ஜோதி யாத்திரை’ நடத்தப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள டாக்டா் எம்.சி.மோடி மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள சங்கரமடம் விளையாட்டு மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பி.எஸ்.எடியூரப்பா பேசியதாவது:-
ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ‘அந்தியோதயா’ கொள்கையுடன் செயல்பட்டு, உலகளவில் நாட்டின் பெருமையை உயர்த்திய பெருமைமிகு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் நமது வளர்ச்சிப் பாதைக்கு வெளிச்சம் தரும் ஜோதியாக விளங்குகிறார்.
பொதுவாழ்வில் தொடர்ந்து 25 ஆண்டுகள் மக்கள் சேவை செய்து அவர் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த கால் நூற்றாண்டு காலமாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, நாட்டின் மிக முக்கிய அரசுகளின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
முதலில் சுமார் 13 ஆண்டுகள் குஜராத் மாநில முதல்வராகப் பொறுப்பேற்று அம்மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அதைத்தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்று உலகரங்கில் பாரதத்தின் பெருமையை நிலைநிறுத்தி வருகிறார். அவர் ஆற்றி வரும் இந்த தொடர் தேசச்சேவை ஈடு இணையற்றது. அவரது சேவை ஜோதி யாத்திரை அனைவரின் வாழ்விலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
















