
திருவனந்தபுரம், நவ. 13-
கேரள பூஜா பம்பர் லாட்டரி குலுக்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த லாட்டரியில் முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்பட உள்ளது. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதால், அவை அனைத்தும் விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஜா பம்பர் குலுக்கல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.இறுதிக்கட்ட விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. கடந்த ஓணம் பம்பர் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்ததைப் போல, பூஜா பம்பர் டிக்கெட்டுகளும் விற்றுவிடும் என லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜேஏ, ஜேபி, ஜேசி, ஜேடி, ஜேஇ ஆகிய 5 சீரியஸ்களில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படும் நிலையில், 2-ம் பரிசாக தலா ரூ.50 லட்சம் வீதம் 10 டிக்கெட்டுகளுக்கும், 3-ம் பரிசாக தலா ரூ.5 லட்சம் வீதம் 10 டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்பட உள்ளது. 4-ம் பரிசாக தலா ரூ.3 லட்சம் வீதம் 5 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். வழக்கம்போல் இந்த முறையும் பாலக்காடு மாவட்டம் விற்பனையில் முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. கடந்த சில பம்பர் லாட்டரிகளில் முதல் பரிசு பெற்ற எண்களில், ஓணம் பம்பர் டிக்கெட் எண் TL 360615; மான்சூன் பம்பர் MC 576896; விஷு பம்பர் VB 135452; சம்மர் பம்பர் SB 517026; கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் XC 138455 ஆகியவை அடங்கும். பூஜா பம்பர் 2025-ல் JD 545542 என்ற எண்ணுக்கு முதல் பரிசு கிடைத்தது. அவற்றின் பரிசுத் தொகைகள் முறையே ரூ.30 கோடி, ரூ.10 கோடி, ரூ.12 கோடி, ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.12 கோடியாகும்.திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் வரும் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெறும். வரிகள் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, முதல் பரிசு வெற்றியாளருக்கு ரூ.6 முதல் 7 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.













