Home செய்திகள் தேசிய செய்திகள் பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் சீண்டல் போலி படம்: வாலிபர் கைது

பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் சீண்டல் போலி படம்: வாலிபர் கைது

புதுடெல்லி, அக். 7-
டில்லியில், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விவேக் பகத், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி புகைப்படங்களைத் தயாரித்து பரப்பியதாக, ஹரியானாவைச் சேர்ந்த நதீம் அஹமது, 24, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைநகர் டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கண்டித்து அரசியல் கட்சிகள் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடந்தது. அங்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விவேக் பகத் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் பத்திரிகையாளர் ரோசி குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, போலீஸ் அதிகாரி விவேக் பகத், ரோசியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதன் உண்மைத்தன்மை குறித்து டில்லி போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் புகைப்படங்கள் ‘நியூஸ் ஆயினா’ என்ற யூடியூப் சேனலுடன் தொடர்புடைய கணக்கிலிருந்து பகிரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த நதீம் அஹமதை கைது செய்தனர். தன்னை பத்திரிகையாளர் எனக் கூறிய நதீம் அஹமது, மதரசா பள்ளியில் படித்தவர் என்றும், 10-ம் வகுப்பை பாதியிலேயே கைவிட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். டில்லி போலீசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் போலி புகைப்படங்களைப் பரப்பியதாக அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும், ஏ.ஐ. படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பல தொழில்நுட்பக் கருவிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.