
ஏடன், அக். 31-
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் புனித நகரான மதீனா மற்றும் ஏமனின் தற்காலிகத் தலைநகரான ஏடனில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தைக் குறிவைத்து ஒரே நேரத்தில் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா ஆதரவு அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதீனா மற்றும் ஏடனில் உள்ள அதிபர் மாளிகை மீது ஹவுதிகள் இரு முனை தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் அமைந்துள்ள மதீனா பகுதியை நோக்கி, வெடிகுண்டுகள் நிரப்பிய ஆளில்லா ட்ரோன் ஒன்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவினர். அந்த ட்ரோனை நடுவானிலேயே கண்டறிந்த சவுதி கூட்டுப் படைகள், அதை இடைமறித்து சுட்டு வீழ்த்தி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏமனின் தற்காலிகத் தலைநகராக செயல்பட்டு வரும் ஏடனில் உள்ள அதிபர் மாளிகை வளாகம் மற்றும் ஏடன் விமான நிலையத்தை குறிவைத்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஏடன் நகரில் பெரும் சத்தத்துடன் வெடிவிபத்துகள் நிகழ்ந்ததாகவும், அதிபர் மாளிகை வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ்கள் விரைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















