
சென்னை: அக். 3-
‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது அரசியல் சார்பற்ற இயக்கம். இந்த இயக்கத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். இதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்த முறை மதுவிலக்கு பிரசாரத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். மக்களுடன் இணைந்து வெற்றி பெறும் வகையில் பிரசாரத் திட்டத்தை வடிவமைக்க இருக்கிறோம். கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பிரசாரம் மேற்கொண்டு மதுவிலக்கை வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
கடந்த 25 ஆண்டுளில் தமிழக அரசின் மதுபான வருவாய் 14 மடங்கும், மதுபான விற்பனை 5 மடங்கும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகியுள்ள நிலையில், மூன்றாவது தலைமுறையை மதுப்பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால்தான் பெண்களின் வாழ்க்கை ஒளிமயமாக மாறுவதுடன், அவர்களுக்கு அதிகாரமும் கிடைக்கும். சாலை விபத்துகள் மற்றும் மரணங்கள் பெருமளவு குறையும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுவதுடன், இளைய தலைமுறையும் காப்பாற்றப்படும் என்று சவுமியா அன்புமணி தெரிவித்தார்.மதுவை படிப்படியாக ஒழிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளின் செயல்பாட்டு நேரத்தையும், கடைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கக் கூடாது. தமிழக அரசு மதுவிலக்கு கொள்கையை உருவாக்க வேண்டும். அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.முன்னதாக பாமக பொருளாளர் திலகபாமா வரவேற்றார். பாமக மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்ற மதுவிலக்கு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதனிடையே, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், அவரது தலைமையில் பாமகவினர் மதுவிலக்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.














