Home மாவட்டங்கள் சென்னை மளிகைப் பொருட்கள் விலை உயர்வு

மளிகைப் பொருட்கள் விலை உயர்வு

சென்னை: அக். 8-
எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை குறைவு காரணமாக சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. தென்னிந்திய அளவில் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த தென்மேற்கு பருவமழைக் காலத்தில், வழக்கத்தைவிட 24 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இந்தக் காலகட்டத்தில் வழக்கமாக 32.8 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட 20 சதவீதம் குறைந்து 26 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதன் தாக்கமாக தமிழகத்தில் கடந்த ஜூலை மாதமே அரிசி விலை உயர்ந்த நிலையில், தற்போது மேலும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்டம், வெட்டுவானத்தில் செயல்பட்டு வரும் அகரமாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் எஸ். வெங்கடேசன் கூறியதாவது:
“முன்பு தமிழகம், ஆந்திரம், கர்நாடகப் பகுதிகளில் இருந்து வேர்க்கடலையை கிலோ ரூ.90 முதல் ரூ.105 வரை கொள்முதல் செய்து வந்தோம். தற்போது பருவமழை குறைந்துள்ளதால் தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் வேர்க்கடலை கிடைக்கவில்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வேர்க்கடலையை கொண்டு வருகிறோம். இதன் காரணமாக வேர்க்கடலை விலை தற்போது கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை விற்பனை செய்து வந்த மரச்செக்கு கடலை எண்ணெயின் ஒரு லிட்டர் விலையை ரூ.240-லிருந்து ரூ.260 ஆக உயர்த்தியுள்ளோம். இதேபோல் நல்லெண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது” என்றார்.