Home செய்திகள் உலக செய்திகள் மாஸ்கோ மீது 1,000 ட்ரோன்கள் தாக்குதல்

மாஸ்கோ மீது 1,000 ட்ரோன்கள் தாக்குதல்

மாஸ்கோ: செப். 21:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. போர் தொடங்கிய பின்னர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும். இதில் 2 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் 5-வது ஆண்டாக நீடிக்கும் நிலையில், இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாகப் பொது உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலின் 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் தாக்கப்பட்டது. இதில் தீப்பற்றியதால் வானுயரத்துக்குப் புகை எழுந்தது. குடியிருப்புப் பகுதிகளிலும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.
மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியேவ் கூறுகையில், சோஃபியினோவில் 3 மாடிக் குடியிருப்புக் கட்டிடம் மீது ட்ரோன் மோதியதில் 44 வயது பெண் உயிரிழந்தார் என்றும், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தார். ஒரேகோவோ-ஜுவோ மாவட்டத்தில் தனியார் வீடு தாக்கப்பட்டதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
மாஸ்கோ மேயர் செர்ஜிசோபியான் கூறுகையில், சனிக்கிழமை முதல் உக்ரைனின் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ‘பிளமிங்கோ’, ‘பெலிகன்’ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்ய எண்ணெய், தளவாட மையங்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.இதற்குப் பதிலடியாக, கீவ் அருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண்ணும் அவரது 2 குழந்தைகளும், சுமி பிராந்தியத் தாக்குதலில் 6 பேரும் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.