
புதுடெல்லி, நவ. 26-
தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி சங்கம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 5-வது இந்திய சர்வதேச விண்வெளி மாநாடு டெல்லியில் கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதற்கு முன்பு தொழில் துறையின் ஆதரவுடன் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது எல்&டி, ஹெச்ஏஎல் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளைத் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி-என்1 வேகமாகத் தயாராகி வருகிறது. அதை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விண்ணில் ஏவுவதை இலக்காகக் கொண்டுள்ளோம். தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் மற்றும் புவி கண்காணிப்பு ஆகியவற்றுக்காக அதிக எண்ணிக்கையிலான விண்வெளிச் சொத்துகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதனை அரசுத் துறையால் மட்டுமே மேற்கொள்ள முடியாது. தற்போது சுற்றுப்பாதையில் இஸ்ரோவின் 56 விண்வெளி சாதனங்கள் மட்டுமே உள்ளன. எனவே, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்கைக்கோள் ஏவுதல்களை அரசு மிகப் பெரிய அளவில் விரைவுபடுத்தி வருகிறது. இதற்காக இஸ்ரோவும் இன்-ஸ்பேஸ் அமைப்பும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனை இன்னும் 5 ஆண்டுகளில் காண முடியும். ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலிருந்து தொடங்கிய நிலையில், தற்போது அந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 440-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று நாராயணன் தெரிவித்தார்.













