Home செய்திகள் தேசிய செய்திகள் மும்பையில் 4 ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட முதியவர் உடல்

மும்பையில் 4 ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட முதியவர் உடல்

மும்பை, அக். 1- எதிர்காலத்தில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையில், மும்பையில் 80 வயது முதியவரின் உடலை அவரது குடும்பத்தினர் சுமார் 4 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவ அறிவியலில் ‘கிரியோபிரீசர்வேஷன்’ முறையில் செல்கள், திசுக்கள், விந்தணுக்கள், கருமுட்டைகள் மற்றும் சில சிறிய உறுப்புகளை உறையவைத்து பாதுகாக்க முடியும். ஆனால் முழு மனித உடலையோ, மூளையையோ உறைநிலையிலிருந்து மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க தற்போதைய மருத்துவத்தால் முடியாது. உடலை உறையவைக்கும் போது ரத்தம் மற்றும் திசுக்களில் உள்ள நீர் படிகங்களாக மாறி செல்களை சேதப்படுத்தும். மேலும், ஒருவர் உயிரிழந்த சில நிமிடங்களிலேயே மூளைச் செல்கள் அழியத் தொடங்குவதால், நினைவுகள் மற்றும் நரம்புத் தொடர்புகளை மீட்டெடுப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மரபியல் மருத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் இது சாத்தியமாகலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதனை நம்பும் சிலர், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வருகின்றனர். மும்பை மலாடு பகுதியில் சமீபத்தில் மூடப்பட்ட மருத்துவமனையில் முதியவரின் உடல் வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 28-ந்தேதி இரவு குரார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரீசர் பெட்டியில் 80 வயது முதியவரின் உடல் இருப்பதை கண்டுபிடித்தனர்.விசாரணையில், அந்த முதியவர் 2022-ம் ஆண்டு புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக இயற்கையாக உயிரிழந்தது தெரியவந்தது. அவருக்கு வயதான மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். அவர்களில் ஒரு மகள் வழக்கறிஞர். குடும்பத்தினர் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்ட மருத்துவமனையில் உடலை பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. துர்நாற்றம் ஏற்படாத வகையில் உடல் பதப்படுத்தப்பட்டிருந்தது. இதற்காக ரூ.50 லட்சம் வரை செலவிட்டதாகவும், அமெரிக்காவில் உள்ள கிரியோபிரீசர்வேஷன் மையத்தை தொடர்புகொண்டதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். உடலை அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். குடும்பத்தினர் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.