Home மாவட்டங்கள் பெங்களூர் மைசூர் தசரா விழா: 21 குண்டுகள் வெடிக்க செய்து யானைப்படைக்கு பயிற்சி

மைசூர் தசரா விழா: 21 குண்டுகள் வெடிக்க செய்து யானைப்படைக்கு பயிற்சி

மைசூர்: அக். 7-
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவையொட்டி, தசரா யானைப்படை மற்றும் குதிரைப்படைக்கான முதல்கட்ட துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டு முழங்கும் பயிற்சி இன்று நகரின் பொருட்காட்சி மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
நகர ஆயுதப்படை போலீசார் 7 பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்தி, 21 சுற்று குண்டுகளை முழங்கி இந்த சீரிய பயிற்சியை மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் கேப்டன் அபிமன்யு தலைமையிலான தனஞ்செயன், மகேந்திரன், பிரசாந்த், சுக்ரீவன், ஏகலைவன், ஸ்ரீராமன், கோபி, காவேரி, லட்சுமி, சைத்ரா, ரூபா மற்றும் ஸ்ரீகண்டன் ஆகிய 13 தசரா யானைகளும், குதிரைப்படையைச் சேர்ந்த 43 குதிரைகளும் கலந்துகொண்டன.
பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் எழுப்பிய அதிபயங்கர வெடிசத்தத்தைக் கொஞ்சமும் கண்டு அஞ்சாமல், யானைகளும் குதிரைகளும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் நின்றன. இதனால் முதல்கட்ட பயிற்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.
இந்நிகழ்வின் போது மைசூர் நகர போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர், துணை கமிஷனர் ஹர்ஷப்பிரியா வதா உள்ளிட்ட பல உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.