
வாஷிங்டன்: அக். 7-
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பிளேக் நோய்க்கிருமி பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் தொலைபேசியில் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சைபீரியாவில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, சோதனைக் குழாய் ஒன்று உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிளேக் நோய்க்கிருமி தாக்கியதில் பெண் ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கிருமி வேகமாகப் பரவக்கூடிய வகையைச் சேர்ந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், சைபீரியாவில் உள்ள ரஷ்ய ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிளேக் நோய் சம்பவம் தொடர்பாக, அதிபர் புடினுடன் விரைவில் தொலைபேசியில் பேச உள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். “பிளேக் என்பது மிகவும் கொடூரமான நோய். முந்தைய காலங்களில் இதை எளிதில் கட்டுப்படுத்தினோம். ஆனால், தற்போது அந்த நுண்ணுயிரிகள் ராணுவப் படையைப் போல அதிக வலிமையுடனும் தந்திரமாகவும் உருமாறியுள்ளன. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்குத் தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது” என்று டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து சர்வதேச சுகாதார அமைப்பு வெளியிட்ட கருத்தில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவத்தால் பிளேக் பிற நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று கூறியுள்ளது. மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.















