Home விளையாட்டு சாண்ட்பேப்பர் விவகாரத்தில் அணியே உடந்தை: கவாஜா

சாண்ட்பேப்பர் விவகாரத்தில் அணியே உடந்தை: கவாஜா

சிட்னி, நவ. 5-
2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை உலுக்கிய ‘சாண்ட்பேப்பர்’ பந்து சேதப்படுத்துதல் விவகாரத்தில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மட்டுமே காரணம் அல்ல என முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் பந்து சேதப்படுத்தும் நடவடிக்கை குறித்து தெரியும் என்றும், இதுதொடர்பாக முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.நவம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ள தனது சுயசரிதையான ‘சப்ர்’ (Sabr) நூல் தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்திய விசாரணை குறித்து கவாஜா பேசியுள்ளார். “பந்து சேதப்படுத்தப்பட்டது எங்கள் அனைவருக்கும் தெரியும். பேட்டர்கள், பவுலர்கள், அணியின் ஊழியர்கள் என ஒட்டுமொத்த அணியும் இதில் உடந்தைதான். நாங்கள்தான் இதைச் செய்தோம். இந்த உண்மையை வெளியில் கூறுவது என் நோக்கம் அல்ல. ஆனால், 8 ஆண்டுகள் கடந்தும் உண்மை வெளிவராததால் நானே பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. “இந்தத் தவறுக்காக ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மட்டுமே பலிகடா ஆக்கப்பட்டதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த அணியும் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்று டிரஸ்ஸிங் ரூமிலேயே கூறினேன். ஆனால், அது நடக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலேயே பந்தை தேய்க்க சாண்ட்பேப்பர் பயன்படுத்தப்பட்டதாகவும் கவாஜா கூறியுள்ளார். “கேப்டவுன் டெஸ்ட் முழுவதும் நான் பான்கிராஃப்ட் அருகில்தான் அமர்ந்திருந்தேன். ஆனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விசாரணை அதிகாரிகள் என்னிடம் ஒரு வார்த்தைகூட விசாரிக்கவில்லை” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.தென்னாப்பிரிக்க பவுலர்களின் ரிவர்ஸ் ஸ்விங்கை சமாளிக்கவே ஆஸ்திரேலிய அணி இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது.