Home விளையாட்டு ஜெய்ஸ்வால் 2வது சதம்: விமர்சனங்களுக்கு பதிலடி

ஜெய்ஸ்வால் 2வது சதம்: விமர்சனங்களுக்கு பதிலடி

லிங்கன், நவ. 5-
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், நியூசிலாந்து மண்ணில் ரன் குவிக்க முடியாது என்ற விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். துருவ் ஜூரல் தலைமையிலான இந்திய ஏ அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, லிங்கனில் உள்ள பெர்ட் சட்க்ளிஃப் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய ஏ அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். நியூசிலாந்து ஏ அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட அவர், 127 பந்துகளில் சதத்தை எட்டினார். டீன் பாக்ஸ்கிராஃப்ட் வீசிய 44வது ஓவரின் 2வது பந்தில் பவுண்டரி அடித்து அவர் சதம் நிறைவு செய்தார். மொத்தம் 138 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால், 16 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 46.3 ஓவர்களில் 175 ரன்கள் சேர்த்தனர். முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 17, 5 ரன்களிலும், 2வது போட்டியின் முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமலும் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
இதனால் அவருக்கு விமர்சனங்கள் எழுந்தன. எனினும், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் எடுத்தார். தற்போது மீண்டும் சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நவம்பர் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்க உள்ள இந்தியா–நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன், அவரது இந்த ஆட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 2வது டெஸ்டில் இந்திய ஏ அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா, திலக் வர்மா ஆகியோரும் விளையாடினர்.