
பெங்களூரு, செப். 19- வர்தூர்–குஞ்சூர்–வைட்ஃபீல்ட் சாலையில் தினமும் பள்ளிப் பேருந்துகள் 5 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கடக்க 2 மணி நேரத்துக்கும் மேலானது. இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். பள்ளி மாணவர்களைப் பாதிக்கும் நீடித்த நெரிசல் மற்றும் மோசமான சாலை நிலைமைகளுக்கு அவசரத் தீர்வு கோரி, பெற்றோர்களும் குடியிருப்பாளர்களும் இணைந்து மனு அளிக்கும் நடவடிக்கையையும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.
பிரெஸ்டீஜ் லேக்சைட் ஹேபிடாட் அருகே, வர்தூரில் உள்ள மாநில நெடுஞ்சாலை-35-ன் பள்ளங்கள் நிறைந்த பகுதி, இந்தப் பரபரப்பான சாலையில் போக்குவரத்தை மெதுவாக்குகிறது. ஆழமான பள்ளங்களால் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். இந்தச் சாலையோரத்தில் சுமார் 20 பள்ளிகள் உள்ளன. தினமும் 15,000 முதல் 25,000 மாணவர்களும், 200 முதல் 300 பள்ளிப் பேருந்துகளும் இச்சாலையைப் பயன்படுத்துகின்றன. “ஆயிரக்கணக்கான மாணவர்களும் குடும்பங்களும் தினமும் இந்தச் சாலையைச் சார்ந்துள்ளனர்.
குறிப்பாக குஞ்சூர் ஏரி–குஞ்சூர் பகுதியில், பள்ளிப் பேருந்துப் பயணம் மிகவும் நீண்டதாகி வருகிறது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி நேரங்களில் கட்டுமான லாரிகள், தண்ணீர் டேங்கர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தல்; பள்ளங்களையும் வடிகால் சேதங்களையும் உடனடியாகச் சீரமைத்தல்; கேஆர்டிசிஎல் பணித்தளங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை; போக்குவரத்துக் காவல்துறை, கேஆர்டிசிஎல், மாநகராட்சி அதிகாரிகள், பெற்றோர் மற்றும் பள்ளிப் பிரதிநிதிகள் இணைந்த ஆய்வு ஆகிய நான்கு நடவடிக்கைகளை பெற்றோர் கோரியுள்ளனர். வர்தூர் வார்டு பாஜக பொறுப்பாளர் வர்தூர் ரக்ஷித் கூறுகையில், “வர்தூர்–குஞ்சூர்–பலாகெரே வழித்தடத்தில் கடுமையான, தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் தினசரி பிரச்சினையாகியுள்ளது. இது குடியிருப்பாளர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பு சமூகங்கள், கிராம மக்கள், பள்ளிக் குழந்தைகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறது” என்றார். 4 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கடந்து வீடு திரும்ப 2½ மணி நேரமானதாக ஒரு மாணவர் கூறினார்.
மற்றொரு மாணவர், “காலையில் பள்ளிக்கு மிகவும் தாமதமாகச் செல்கிறேன்; பெரும்பாலும் முதல் வகுப்பு முடிந்த பிறகே சென்றடைகிறேன்” என்றார். குடியிருப்பாளர் வித்யாசாகர் கூறுகையில், மக்கள் தாங்களே பள்ளங்களை நிரப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். வர்தூர் பகுதியில் எஸ்எச்-35 சாலையில் குடியிருப்பாளர்கள் பள்ளங்களை நிரப்பினர். “காண்டியூர் லேண்ட்மார்க் அருகிலுள்ள ராமர் கோயில் சந்திப்பு முழுமையாகத் தார்ச்சாலையாக்கப்பட வேண்டும்.
200–300 மீட்டர் மட்டுமே உள்ள இந்தப் பகுதியில் ஆழமான பள்ளங்களால் போக்குவரத்து மிக மெதுவாகிறது. வர்தூர் காவல் நிலையத்திலிருந்து வர்தூர் கோடி வரையிலான 2 கிலோமீட்டர் சாலையும் முழுமையாகத் தார்ச்சாலையாக்கப்பட வேண்டும்” என்றார். மேலும், “பிரிகேட் யுடோப்பியா முதல் காண்டியூர் லேண்ட்மார்க் வரை எஸ்எச்-35 பிரதான சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்; தற்போது இல்லை. கூடுதல் போக்குவரத்துக் காவலர்களை நியமித்து, சிக்னல்கள் அமைக்க வேண்டும். சிடிபி, பனத்தூர் கீழ்பாலம் வழியாக வர்தூர்–குஞ்சூர் பகுதியிலிருந்து ஓஆர்ஆர் பெல்லந்தூர் செல்ல நேரடி பிஎம்டிசி பேருந்துகளை இயக்க வேண்டும்; அதுவே குறுகிய வழி. மக்கள் தனியார் கார்களைத் தவிர்ப்பார்கள். கேஐஏ பேருந்துகளையும் விமான நிலையத்துக்கு இயக்க வேண்டும். இதனால் நெரிசல், மாசு உள்ளிட்டவை தீரும்” என்றார்.மற்றொரு குடியிருப்பாளரான மோனாலிசா கூறுகையில், “வர்தூரின் பிரச்சினைகள் எஸ்எச்-35-க்கு மட்டும் உட்பட்டவை அல்ல. போக்குவரத்து, சாலை உள்கட்டமைப்பு, வடிகால், மாசு, பசுமை, கழிவு மேலாண்மை, பாதசாரிகள் மற்றும் பள்ளிப் பேருந்துப் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். எனவே, எஸ்எச்-35 விரிவாக்கமே தீர்வு எனக் கருதாமல், பல துறைகளின் ஒருங்கிணைந்த, பிரச்சினை சார்ந்த அணுகுமுறை தேவை” என்றார்.















