Home மாவட்டங்கள் பெங்களூர் விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்

விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்

பெங்களூரு, நவ. 8-
பெங்களூருவில் இருந்து லக்னோ நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், கடத்தல் மிரட்டல் காரணமாக மீண்டும் பெங்களூருவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்தனர். நேற்று மாலை 5.50 மணியளவில் விமானம் புறப்பட்டது. புறப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தின் கழிவறையைப் பயன்படுத்திய பயணி ஒருவர் அங்கு காகிதம் ஒன்று கிடப்பதைப் பார்த்தார். இதுகுறித்து அவர் உடனடியாக விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தார். அந்தக் காகிதத்தில், “இந்த விமானம் சரியாக மாலை 6.30 மணிக்கு கடத்தப்படப் போகிறது. இதை அலட்சியப்படுத்தினால் விளைவுகளைச் சந்திப்பீர்கள்” என்று கையால் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, விமானப் பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விமானம் லக்னோ செல்லாமல் பெங்களூரு நோக்கித் திருப்பப்பட்டது.