
புதுடெல்லி: அக். 8:
விமானப்படை வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 8-ஆம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கைப் பேரிடர் காலங்களிலும் விமானப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “விமானப்படை வீரர்களைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. விமானப்படை தினத்தில், நமது வான்வெளியைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் நாம் போற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், விமானப்படை தினத்தை முன்னிட்டு அனைத்து விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்திய விமானப்படை நாட்டுக்கு முன்மாதிரியான சேவையை ஆற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டைப் பாதுகாப்பதில் விமானப்படை வீரர்களின் துணிச்சல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது நிரூபிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பு நாட்டுக்கு உத்வேகமாகவும் பெருமையாகவும் விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இந்திய விமானப்படை தனது பெருமைமிக்க சேவையை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி முர்மு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.













