
புதுடெல்லி: அக். 8:
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசிக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பிஸ்தா, பாதாம், வால்நட், பேரீட்சை உள்ளிட்ட உலர் பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி தொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் வெளியிட்ட பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: “மோடி அரசின் பாதுகாப்பில் விலைவாசி என்ற அரக்கி மக்களை வாட்டுகிறது. தீபாவளி என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய பண்டிகை. ஆனால், விலைவாசி உயர்வு நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு முன்பே பணவீக்கம் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் உணர்ந்து வருகின்றனர். “உலர் பழங்களின் விலை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. இதில் பிஸ்தாவின் விலை 70 சதவீதம் வரையிலும், பாதாமின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. முந்திரியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. “அரசுத் தரவுகளைப் பயன்படுத்தி விலைவாசி உயர்வின் தாக்கத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதன் பாதிப்பை ஒவ்வொரு இந்தியரும் அனுபவித்து வருகின்றனர். பணவீக்கத்தில் இருந்து எப்போது நிவாரணம் கிடைக்கும் என்பதை அரசு விளக்க வேண்டும். அதேபோல், சாதாரண குடும்பங்களின் பொருளாதாரச் சுமைக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.













