
புதுடெல்லி, நவ. 2- வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில், இந்திய ஜனநாயக அமைப்புக்கு ராகுல் காந்தி சவால் விடுக்க முயற்சிப்பதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரில் பாஜக சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்’ என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் பங்கேற்று உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-
“ஜனநாயகத்தைக் காப்போம்” பேரணியில் நாம் பங்கேற்கும்போது, நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்படும் குழப்பம் மற்றும் ஸ்திரமின்மை சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும். ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகளின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்கிறார். அவர்களின் தூண்டுதலின் பேரில் இந்திய ஜனநாயக அமைப்புக்கு சவால் விடுக்க அவர் முயற்சிக்கிறார். சமீப காலமாக பிற நாடுகளில் பிளவுகளை ஏற்படுத்தி, குழப்பத்தை உருவாக்கி வரும் அதே வெளிநாட்டு சக்திகளுடன், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சில காங்கிரஸ் தலைவர்களும் இணைந்து ‘ஆட்சியை மாற்றுவது’ குறித்து பேசி வருகின்றனர். ஆனால், இது மக்களின் ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட அரசு. இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது.
நாட்டின் 140 கோடி மக்களிடம் காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியானால், யார் மீது காங்கிரஸ் நம்பிக்கை வைக்கிறது?” என்று நிதின் நவீன் கேள்வி எழுப்பினார்.













