Home மாவட்டங்கள் பெங்களூர் வெவ்வேறு விபத்துகளில் டெலிவரி பாய் உள்பட 5 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் டெலிவரி பாய் உள்பட 5 பேர் பலி

பெங்களூரு, நவ. 2-
பெங்களூரு நகரில் நடைபெற்ற 5 வெவ்வேறு வீதி விபத்துக்களில் டெலிவரி பாய் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லேஅவுட், ஜே.பி. நகர், தலக்கட்டபுரா, ஞானபாரதி மற்றும் ஹுளிமாவு ஆகிய பகுதிகளில் இந்த சோகச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் சாகித்ய ராஜ் (வயது 26), சுரேஷ் (33), கணேஷ் குமார் (19), தேவராஜ் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஆட்டோ-பைக் மோதல்:
எச்.எஸ்.ஆர். லேஅவுட் 14-வது பிரதான சாலையில் உள்ள அப்பல்லோ கிளினிக் அருகே இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த இந்திரா நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாகித்ய ராஜ் என்பவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதேபோல்
ஜே.பி. நகர் புட்டேனஹள்ளி பாளையா சாலையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மற்றொரு விபத்து நடந்தது. உணவு டெலிவரி நிறுவன ஊழியரான சுரேஷ், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இவர் மூலமாக பேதமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சரக்கு வாகனம் விபத்து:
பன்னேருகட்டா டோல்கேட் அருகே நைஸ் சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் 2 சரக்கு வாகனங்கள் மோதிக்கொண்டன. எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த கணேஷ் குமார் ஓட்டிச் சென்ற வாகனம், முன்னால் சென்ற மற்றொரு வாகனம் மீது பின்புறமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டிப்பர் லாரி மோதி டிரைவர் பலி:
நேற்று இரவு 7.30 மணி அளவில் அன்னபூர்ணேஸ்வரி நகர் பிரதான சாலையில் கேப் டிரைவர் தேவராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னாலிருந்து வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்காட்டில் அமர்ந்து சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஞானபாரதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்:
இன்று காலை 7.30 மணி அளவில் ஹுளிமாவு போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்ட பி.டி.எம். லேஅவுட் 16-வது பிரதான சாலையில், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த 5 விபத்துகள் குறித்தும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.